மத்திய அரசின் விவசாய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
ஆர்.எஸ்.மங்கலத்தில் மத்திய அரசின் விவசாய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்,
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் சோழந்தூரில் விவசாயிகளை ஒன்று திரட்டி கையெழுத்து இயக்கம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமைதாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளருமான சஞ்சய்தத், யூனியன் தலைவர் ராதிகா பிரபு, விவசாய சங்க பொறுப்பாளர்கள் நாகமுத்து, பாலகிருஷ்ணன், தனபால், நாகராஜ், கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் விவசாய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிராக்டரில் ஊர்வலமாக சென்று மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேசியதாவது:- 2014-ம் ஆண்டு மும்பையில் பிரமதர் மோடி பேசுகையில் விவசாயிகளின் நலன் கருதி உற்பத்திப்பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் உத்தரவாதம் அளிக்கப்படும். விவசாயிகளின் பெயரில் தனித்தனியாக இன்சூரன்ஸ் வழங்கப்படும் என கூறினார். ஆனால் பல ஊர்களில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரை இன்சூரன்ஸ் தொகை வழங்காமல் இருப்பது வருந்தத்தக்கது.
தற்போது விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் விவசாய சட்டத்திருத்தம் கொண்டு விவசாயிகளின் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். பிரதமர் மோடி நாட்டுமக்களை காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆடம்பர உடை அணிவதும், வெளிநாடு செல்வதற்காக ஆடம்பர தனி விமானம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிராக்டரில் பயணித்து நானும் ஒரு விவசாயி மகன்தான் என கூறிக்கொண்டு தமிழக விவசாயிகளை ஏமாற்றும் வகையில் நாடகமாடுகிறார். ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் பா.ஜனதா அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான சட்டதிருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story