கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை
கடலூர் மாவட்ட கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது.
கடலூர்,
தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது அந்த மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர அறுவடை செய்த வெங்காயமும் அழுகி வீணாகி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய வெங்காயம் வரத்து குறைந்து விட்டது. இதனால் வெங்காயம் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.90 வரையும், சாம்பார் வெங்காயம் ரூ.120 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு 1 கிலோ வெங்காயம் வாங்கிய பொதுமக்கள் தற்போது ½ கிலோ மட்டுமே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. வெங்காயத்தை உறித்தால் தான் கண்ணீர் வரும், ஆனால் தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலைக்கு அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து மொத்தமாக வெங்காயத்தை வாங்கி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக இந்த வெங்காயம் விற்பனை தொடங்கியது.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் கிடையாது என்பதால் கடலூர் சரவணபவ கூட்டுறவு அங்காடி, சாவடி அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி, பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய கூட்டுறவு சிறப்பு அங்காடிகளிலும் வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடலூர் சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. ஆனால் ஒரு நபர் அதிக அளவில் வெங்காயத்தை வாங்கி சென்று விடக்கூடாது என்பதற்காக ஒரு நபருக்கு, அதாவது குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
இது பற்றி கூட்டுறவு அதிகாரி ஒருவர் கூறுகையில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அறிவித்தபடி வெங்காயம் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்து வருகிறோம். மாவட்டத்திற்கு 5 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டு அதை அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். இதன் தேவையை பொறுத்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story