ஆர்வமுள்ள விவசாயிகள் விரால் மீன் வளர்த்து வருமானத்தை பெருக்கலாம் - கலெக்டர் வேண்டுகோள்


ஆர்வமுள்ள விவசாயிகள் விரால் மீன் வளர்த்து வருமானத்தை பெருக்கலாம் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Oct 2020 7:30 PM IST (Updated: 29 Oct 2020 7:17 PM IST)
t-max-icont-min-icon

ஆர்வமுள்ள விவசாயிகள் விரால் மீன் வளர்த்து வருமானத்தை பெருக்கலாம் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

பிரதம மந்திர் மட்ஸ்யா செம்பட யோஜனா திட்டத்தின் கீழ் மீன்பிடி தொழில் வருவாயை இரட்டிப்பாக்கவும், மீன்கள் மற்றும் மீன்கள் சார்ந்த பொருட்கள் உற்பத்தியை பெருக்கவும் கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவினருக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் பிரதம மந்திர் மட்ஸயா செம்பட யோஜனா என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ள பலதரப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் பல்வேறு திட்டங்களில் பயன்பெறலாம். விரால் மீன் அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய அதிக அளவில் விரும்பி உண்ணக்கூடிய மற்றும் இதன் புரதச்சத்து எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவாகும். கடலூர் மாவட்டத்தில் தற்போது விரால் மீன் குஞ்சுகளுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. விரால் மீன் குஞ்சுகள் இயற்கை முறையில் சேகரித்தல் மற்றும் பெரும்பாலும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரவழைத்து இருப்பு செய்யப்படுகிறது.

ஆகவே கடலூர் மாவட்டத்தில் விரால் மீன் பொரிப்பகம் அமைத்து விரால் மீன் குஞ்சுகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில் விரால் மீன் வளர்ப்பு ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்க வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பிற மாவட்ட மீனவர்களும், விவசாயிகளும் பயன் அடைவார்கள். இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் முருகன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் சின்னகுப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story