15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
தமிழகத்தில் தூய்மை காவலருக்கான ரூ.1,000 ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கடந்த 1981-ம் ஆண்டு பணி நிரந்தர சட்டப்படி 480 நாட்கள் பணி முடித்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் இறந்த பணியாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம்(ஏ.ஐ.டி.யு.சி) சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகுநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தொரை, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி தூய்மை பணியாளர்கள், குடிநீர் பம்பு ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணி பதிவேடு பதியப்பட வேண்டும். பணியின் போது மரணம் அடைந்த ஊராட்சி பணியாளர்களின் வாரிசுக்கு குடும்ப நல நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி தூய்மை பணியாளர், குடிநீர் பம்பு ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் ஏ.டி.சி. ஊட்டி நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட ஊராட்சி குடிநீர் குழாய் இயக்குனர் உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் குறித்து ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story