தேனியில் மனநல மருத்துவ மையம் நடத்திய போலி டாக்டர் கைது


தேனியில் மனநல மருத்துவ மையம் நடத்திய போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2020 8:00 PM IST (Updated: 29 Oct 2020 7:48 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் மனநல மருத்துவ சிகிச்சை மையம் நடத்திய போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தேனி,

தேனி மாவட்டம் போடி மேலத்தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 36). இவர், தேனி என்.ஆர்.டி. நகர் கஸ்தூரிபாய் தெருவில் சன் மனநல மறுவாழ்வு மையம் என்ற பெயரில் மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இவர், முறையாக மருத்துவம் படிக்காமல் போலியான சான்றுகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனருக்கு, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் இந்த மருத்துவ மையத்தில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் மருத்துவம் படிக்காமல் போலியான டாக்டர் அடையாள அட்டை மற்றும் போலியான மருந்து சீட்டுகளை அப்பாஸ் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலி அடையாள அட்டை, மருந்துச் சீட்டு மற்றும் அங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவற்றை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் அப்பாசை கைது செய்தார். பின்னர் அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். கைதான அப்பாஸ், கடந்த 2018-ம் ஆண்டு கள்ளநோட்டு வழக்கில் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story