சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி சுகாதார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - திருப்பூரில் 10 இடங்களில் நடந்தது
சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி திருப்பூரில் 10 இடங்களில் சுகாதார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர்,
கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் இன்று வரை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 21 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சுகாதார தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருவம்பாளையம் மாட்டுக்கொட்டகை, குமரன் சிலை, பங்களா பஸ் நிறுத்தம், புதிய பஸ் நிலையம், தென்னம்பாளையம், பெரிச்சிபாளையம், பல வஞ்சிபாளையம், வீரபாண்டி, வீரபாண்டி பிரிவு, ராயபுரம் ஆகிய 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். கருவம்பாளையம் மாட்டுக்கொட்டகை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தென்னம்பாளையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதார சங்க பொருளாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பங்களா பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story