திருப்பூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - பிரிந்து சென்றவர் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தபோது விபரீத முடிவு


திருப்பூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - பிரிந்து சென்றவர் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தபோது விபரீத முடிவு
x
தினத்தந்தி 29 Oct 2020 10:15 PM IST (Updated: 29 Oct 2020 10:03 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கணவரை விட்டு பிரிந்து சென்ற இளம்பெண் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

நல்லூர்,

நாமக்கல் மாவட்டம், எழுவகாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 36). இவரது மனைவி வினோதா (25). இவர்கள் இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் தம்பதி திருப்பூர் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். மூர்த்தி எலாஸ்ட்டிக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பாலாஜி நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வினோதா வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வினோதாவுக்கு, அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வினோதா தனது கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இது குறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஊரக போலீசார் அவரை மீட்டு வந்து அறிவுரை கூறி கணவருடன் சேர்த்து வைத்தனர். அதை தொடர்ந்து கடந்த ஒருமாதமாக வினோதா, தனது கணவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் சாப்பிடுவதற்கு மதியம் வீட்டுக்கு மூர்த்தி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் வினோதா இருக்கும்போது கதவு சாத்தப்பட்டு இருக்கும். ஆனால் நேற்று வீட்டின் கதவு திறந்து இருந்தது.

இதையடுத்து வீட்டிற்குள் மூர்த்தி சென்றபோது வீட்டின் சமையல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் வினோதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன், வினோதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோதாவை பரிசோதனை செய்த, டாக்டர் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று வினோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வினோதாவிற்கு திருமணம் முடிந்து 7 வருடம் ஆகாத காரணத்தால் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story