சேதமடைந்த சாலைகளால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதம் - ஆம்புலன்சில் குழந்தை பிறப்பில் ராய்ச்சூருக்கு முதலிடம்


சேதமடைந்த சாலைகளால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதம் - ஆம்புலன்சில் குழந்தை பிறப்பில் ராய்ச்சூருக்கு முதலிடம்
x
தினத்தந்தி 30 Oct 2020 4:00 AM IST (Updated: 30 Oct 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த சாலைகளால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதம் ஆவதால், ஆம்புலன்சில் குழந்தைகள் பிறப்பதில் ராய்ச்சூருக்கு முதல் இடம் கிடைத்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல, 714 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில சமயங்களில் ஆம்புலன்ஸ் வர தாமதம் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லும் நிலையில் உள்ளவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால், அவசர தேவைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதிலும் நிறைமாத கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக அழைத்து செல்லும் போது சேதமடைந்த சாலைகளால் ஆம்புலன்சை வேகமாக இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் ஆம்புலன்சிலேயே குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்களும் நடந்து உள்ளன.

வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் தான் சாலைகள் அதிகமாக சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் பிரசவத்திற்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்படும் கர்ப்பிணிகளை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாததால், ஆம்புலன்சிலேயே மருத்துவ ஊழியர்கள் பிரசவம் பார்க்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கர்நாடகத்தில் ஆம்புலன்சில் குழந்தை பிறப்பில் ராய்ச்சூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை ராய்ச்சூர் மாவட்டத்தில் மட்டும் ஆம்புலன்சிலேயே 81 கர்ப்பிணிகள் குழந்தையை பெற்றெடுத்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கலபுரகியில் 76 பேரும், விஜயாப்புராவில் 64 பேரும், பெலகாவியில் 59 பேரும், பல்லாரியில் 54 பேரும் ஆம்புலன்சிலேயே குழந்தை பெற்று உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்த குழந்தைகளும் உயிரிழக்கவில்லை. இந்த நிலையில் வடகர்நாடகத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story