தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
கரூர் வெங்கமேட்டில் தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
கரூர்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 25 தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களை திறந்து வைத்தார். கரூர் நகரத்தில் வெங்கமேடு சாலையில் அமைந்துள்ள ஆசியன் பேப்ரிக்ஸ் நிறுவன வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தினையும் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிலையத்தில், காற்றில் கலந்துள்ள மாசு காரணிகள் 10 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள நுண்துகள்கள், 2.5 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள நுண்துகள்கள், சல்பர்டைஆக்ஸைடு, நைட்ரஜன்டை ஆக்ஸைடு, அம்மோனியா, ஓசோன், கார்பன் மோனக்சைடு மற்றும் பென்சின், டெலுவின், ஜைலின் ஆகியவற்றின் அளவுகள் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு, இப்புள்ளி விவரங்கள் மின்னணு காட்சிப் பலகையில் பொதுமக்களின் பார்வைக்காக தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும். இப்புள்ளி விவரங்களைக் கொண்டு காற்று தன்மை குறியீடு கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மேலும், இந்த நிலையத்தில் இருந்து பெறப்படும் புள்ளி விவரங்கள் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்டங்களின் அருகிலுள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, காற்றுத்தரக் குறியீட்டினை எட்டாத நகரங்களுக்கு காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கவும், திட்ட அறிக்கை தயாரித்து செயல்படுத்தவும், புதிய தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்வதற்கும் இப்புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள காற்று தர கண்காணிப்பு நிலையத்தினை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story