நெல்லையப்பர் கோவிலில் இந்து முன்னணியினர் உள்ளிருப்பு போராட்டம் ஐப்பசி திருவிழாவை நடத்த வலியுறுத்தல்


நெல்லையப்பர் கோவிலில் இந்து முன்னணியினர் உள்ளிருப்பு போராட்டம் ஐப்பசி திருவிழாவை நடத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Oct 2020 11:09 AM IST (Updated: 30 Oct 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி திருவிழாவை நடத்த வலியுறுத்தி நெல்லையப்பர் கோவிலில் இந்து முன்னணியினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். ஐப்பசி மாதம் நடைபெறும், ஐப்பசி திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவில் கோலாகலமாக காணப்படும்.

ஐப்பசி திருவிழாவில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிகச்சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்னும் 2 நாட்களில் வர உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நெல்லையப்பர் கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. உள்பிரகாரத்தில் மட்டும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

ஐப்பசி திருவிழாவைப் பற்றி இந்துசமய அறநிலையத்துறை சார்பில், எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இந்து முன்னணியினர் நேற்று காலை நெல்லையப்பர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் உள்ள செயல் அலுவலர் அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பிரமநாயகம் முன்னிலை வகித்தார். பல்வேறு இடங்களில் இருந்தும் இந்து முன்னணியினர் நெல்லையப்பர் கோவிலுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் நெல்லையப்பர் கோவில் நுழைவுவாயில் பகுதியில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

கோவிலில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார், போராட்டம் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குற்றாலநாதன் கூறுகையில் “இன்று (அதாவது நேற்று) இரவுக்குள் திருவிழாவை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாளை (சனிக்கிழமை) காலை பக்தர்களை திரட்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்“ என்றார். இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சுடலை, சிவா, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், செல்வம், நமச்சிவாயம், நிர்வாகிகள் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், அருள்ராஜ், விமல் நாராயணன், பக்தர் பேரவை சேர்ந்த ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story