புளியங்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலி 19 பேர் படுகாயம்


புளியங்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலி 19 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Oct 2020 11:22 AM IST (Updated: 30 Oct 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

வாசுதேவநல்லூர், 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளாளங்கோட்டையைச் சேர்ந்தவர் கனிராஜ். இவருடைய மகனுக்கு பக்கத்து ஊரான கோட்டமலை கருப்பசாமி கோவிலில் நேற்று முடி காணிக்கை செலுத்துவதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் சில வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். கோவிலில் முடி காணிக்கை செலுத்தி விட்டு, மாலையில் கோவிலில் இருந்து அனைவரும் வாகனங்களில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். கனிராஜின் குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடைய உறவினர்கள் லோடு ஆட்டோவில் சென்றனர்.

கோட்டமலை கருப்பசாமி கோவில் அருகில் நவாசாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் லோடு ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த அனைவரும் அலறி துடித்தனர்.

2 பேர் பலி

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த வெள்ளாளங்கோட்டையைச் சேர்ந்த கணபதி மகன் மாரிச்சாமி (வயது 43), தன்னாசி மனைவி சுந்தரம்மாள் (60) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் முத்து ரித்திகா (12), பூஜா (9), ராஜேசுவரி (21), அனிதா (35), கிருஷ்ணவேணி (30), மாரியம்மாள் (35), வள்ளி (55), அய்யனார் (51), பார்வதி (45), முகேஷ் (15), முருகராஜ் (12), வினோத் (17), தனலட்சுமி (40), சண்முகத்தாய் (30), பிரதாப் (13), சிதம்பராபேரியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) உள்ளிட்ட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்துக்கும், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லோடு ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த மாரிச்சாமி, சுந்தரம்மாள் ஆகியோரின் உடல் களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவரான வெள்ளாளங்கோட்டையைச் சேர்ந்த அய்யனார் மகன் மற்றொரு மாரிச்சாமியிடம் (36) விசாரித்து வருகின்றனர்.

Next Story