ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு: 7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் மந்திரவாதி கைது


ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு: 7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் மந்திரவாதி கைது
x
தினத்தந்தி 30 Oct 2020 11:33 AM IST (Updated: 30 Oct 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழ புளியங்காய் காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 55). மந்திரவாதியான இவர் தனது வீட்டில் பூஜைகளை செய்து, பொதுமக்களுக்கு குறிசொல்லி வந்தார்.

இந்த நிலையில் 7 வயது சிறுமியின் காலில் புண்கள் ஏற்பட்டது. கண் திருஷ்டியை கழிப்பதற்காக கழித்து வைத்த பொருட்களில் சிறுமி மிதித்ததால்தான், காலில் புண்கள் ஏற்பட்டதாக அவளது தாயார் கருதினார்.

பூஜை நடத்த...

இதையடுத்து அவர் சம்பவத்தன்று தனது மகளை அழைத்துக்கொண்டு சின்னத்துரையின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர், தனது மகளுக்கு ஏற்பட்ட புண்களை குணமாக்கும் வகையில் அவளுக்கு கண்திருஷ்டியை கழிப்பதற்கான பூஜைகளை நடத்துமாறு கூறினார்.

இதையடுத்து பூஜைக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியின் தாயாரிடம் சின்னத்துரை கூறினார். உடனே அவர் தனது மகளை அங்கேயே விட்டு விட்டு, பூஜை பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.

சிறுமி பலாத்காரம்

அப்போது சிறுமியை சின்னத்துரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூஜை பொருட்களை வாங்கி விட்டு, சின்னத்துரையின் வீட்டுக்கு சிறுமியின் தாயார் சென்றார். தொடர்ந்து சின்னத்துரை பூஜை செய்து விட்டு, சிறுமியை அவளது தாயாருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது அவள், சின்னத்துரை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தாயாரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சின்னத்துரையிடம் சென்று முறையிட்டார். அப்போது அவர், இதனை வெளியில் சொன்னால் மந்திரம் வைத்து குடும்பத்தையே கொன்று விடுவதாக மிரட்டினார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து சிறுமியின் தாயார் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு, கோவையில் தொழிலாளியாக பணியாற்றும் கணவரிடம் சென்றார். தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story