தேன்கனிக்கோட்டை அருகே, திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கவிழ்ந்தது - பெண்கள் உள்பட 60 பேர் காயம்


தேன்கனிக்கோட்டை அருகே, திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கவிழ்ந்தது - பெண்கள் உள்பட 60 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Oct 2020 2:15 PM IST (Updated: 30 Oct 2020 2:09 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கவிழ்ந்து பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சொட்டான்டஅள்ளி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் ஒரு தனியார் பஸ்சில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கேரட்டி கிராமத்திற்கு திருமண விழாவிற்கு சென்றனர். இந்த பஸ் நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையில் திருமுருக்கு வளைவு என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து அருகில் இருந்த புங்க மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இந்த விபத்து குறித்து அவர்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாலக்கோடு சொட்டான்டஅள்ளியைச் சேர்ந்த திருப்பதி (வயது 23), பாலக்கோடு திருப்பதி (23), சின்னசாமி (40), மாரண்டஅள்ளி திருப்பதி (35) ஆகிய 4 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல சொட்டான்ட அள்ளியை சேர்ந்த முனிவேல் மகள் மணிமேகலை (16), பிரியங்கா (26), ஆர்த்தி (20) உள்பட 10 பேர் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். லேசான காயம் அடைந்த மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story