சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்காக தொடர் கண்காணிப்பு மையம் - கலெக்டர் ராமன் திறந்து வைத்தார்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்காக தொடர் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டது. இதனை கலெக்டர் ராமன் திறந்து வைத்தார்.
சேலம்,
சேலம் அரசு ஆஸ்பத்திரியில், கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த கவனிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, தொடர் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி, அதில் இருந்த பூரண குணமடைந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், மன அழுத்தத்தை போக்கிடவும், அவர்களை பாதுகாத்திடவும் புதிய ஒருங்கிணைந்த கவனிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு மையம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்தவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுதலுக்கு பிறகு உடல் நலனை பாதுகாக்கவும் உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வேண்டிய வழிமுறைகள் பற்றிய ஆலோசனை வழங்கப்படுகிறது. இங்கு பொது மருத்துவ துறை நிபுணர், நுரையீரல் பிரிவு நிபுணர், மனநல நிபுணர், உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவ துறை நிபுணர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறை நிபுணர் மற்றும் உணவியல் நிபுணர்களால் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
நுரையீரல் பிரிவு மற்றும் பொது நல மருத்துவ துறை நிபுணர்கள் கொரோனா தொற்றினால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் மற்ற பொது மருத்துவ பாதிப்புகளுக்கு ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றினால் நுரையீரலில் ஏற்பட்ட சுவாச பிரச்சினைகளை அகற்றி நுரையீரல் திறனை மேம்படுத்த சுவாச கருவி பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் மூலம் நுரையீரலை வலுப்படுத்த தியானம், யோகாசனம் சுவாச பயிற்சிகள் மற்றும் யோகாசனம் கற்றுத்தரப்படும். உடல் மற்றும் மனதை பலப்படுத்த நறுமண சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தி பானம் இயற்கை உணவு முறைகள் ஆகிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களில் சுமார் 4,500-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
முன்னதாக, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் பிராணவாயு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிராணவாயு கலன்கள் அமைக்கும் பணியையும், ரூ.48 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய பணியையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
நிகழ்ச்சியில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், கொரோனா சிகிச்சை பிரிவு மைய சிறப்பு டாக்டர் சுரேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story