திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல்
திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செயல் அலுவலர் மற்றும் எழுத்தரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவலம்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் வெங்கடேசன் என்பவர் செயல் அலுவலராக இருக்கிறார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து, பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு, வரிவிதிப்பு, கட்டிட அனுமதி ஆகியவற்றுக்கு வரும் பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது.
இதனையடுத்து அவர் திருவலம் பேரூராட்சியில் இருந்து வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டார். இருதாலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் திருவலம் பேரூராட்சியின் செயல் அலுவலராகவே தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் அவர், பொதுமக்களிடம் பல்வேறு சேவைகளுக்காக லஞ்சம் பெறுவது தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக அரசு ஒதுக்கிய நிதியை செலவிடுதலிலும் திருவலம் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வேலூரில் உள்ள லஞ்சஒழிப்புத் துறை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமா சித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி, ரஜினிகாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர், திருவலம் பேரூராட்சியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் எழுத்தர் துரை ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்த இந்த சோதனையில், செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் எழுத்தர் துரையிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவலம் அடுத்த கார்ணாம்பட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது, விவசாய இணைப்புக்கு விவசாயி ஒருவரிடம், மின்வாரிய பொறியாளர் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே திருவலம் பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story