ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை - ராமேசுவரத்தில் 102 மில்லி மீட்டர் பதிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 102 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும் வளிமண்டலத்தில் வறண்ட காற்றும் ஈரப்பத காற்றும் இணைந்துள்ளதால் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யும் என் வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே நன்றாக இருந்தது. நேற்று மாலை மாவட்டத்தின் தொடக்கமாக கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி பகுதிகளில் இருந்து பலத்த இடி மின்னலுடன் பெய்யத்தொடங்கிய மழை இரவு ராமநாதபுரம், ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம் என அனைத்து பகுதியிலும் கொட்டி தீர்த்தது. இரவு முழுவதும் சில இடங்களில் இடைவிடாமலும், பல இடங்களில் விட்டுவிட்டும் மழை பெய்தது.
பலத்த இடி மின்னலுடன் பெய்த இந்த மழைகாரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சி நிலவியதோடு விவசாய நிலங்களில் மழைநீர் விழுந்து விதைநெல் முளைக்க தொடங்கி உள்ளது. இன்னும் சில இடங்களில் முன்னரே பெய்த மழையில் முளைத்திருந்த நெற்பயிர்கள் நேற்று பெய்த மழையில் இன்னும் தளிர்த்து பச்சை பசேல் என்று வயல்வெளிகளில் காட்சி அளிக்கின்றன. இந்த மழை காரணமாக மாவட்டத்தின் நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் சேரத்தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழையின் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதால் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யும் என்று விவசாயிகளும், மக்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- கமுதி-55.8, முதுகுளத்தூர்-65, பாம்பன்-87.1, பரமக்குடி-46.8, ராமநாதபுரம்-6.5, திருவாடானை-1.4, தொண்டி-1.6, பள்ளமோர்குளம்-13, மண்டபம்-65, ராமேசுவரம்-102, தங்கச்சிமடம்-80.5, ஆர்.எஸ்.மங்கலம்-56, கடலாடி-48, வாலிநோக்கம்-17. சராசரி;-40.36.
மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை விவசாய பகுதி இல்லாத ராமேசுவரம் பகுதியில் அதிகஅளவில் பெய்துள்ளது. இதுதவிர, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் பெய்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் திருவாடானை பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. தற்போதுதான் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் கடந்த ஆண்டைபோல நன்றாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story