காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு அதிகம் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு அதிகம் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2020 12:15 PM GMT (Updated: 30 Oct 2020 12:10 PM GMT)

காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு அதிகம் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கை நகரில் அரண்மனை வாசலில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருகிறேன். இருந்தாலும் மக்களிடம் அதிக அளவு கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் என்பதற்காக பொது இடங்களுக்கு சென்று தற்போது மனுக்களை பெற்று வருகிறேன். இதற்கு முன்னதாக பொன்னமராவதியில் மனுக்கள் பெறப்பட்டது.

தற்போது சிவகங்கையிலும் பெறப்பட்டுள்ளது. என்னிடம் கொடுக்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கிறேன்.தொடர்ந்து இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அலுவலகங்களில் சென்று விசாரித்து வருகிறேன். என்னிடம் சிவகங்கையில் கொடுத்த மனுக்களில் மின்விளக்கு அமைக்க வேண்டும், நிழற் குடை அமைக்க வேண்டும். ரெயில் இயக்க வேண்டும் என்பது போன்ற மனுக்கள் அதிகம் இருந்தது.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும். தற்போது எவ்வாறு தி.மு.க. வினர் பிரசாந்த் கிஷோர் மூலம் சர்வே எடுத்து வருகிறார்களோ அது போலவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒரு சர்வே எடுக்கிறது. அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்திலும் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு நடைபெறும்போது எந்தெந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்றும் அதற்கு என்ன காரணம் என்றும் இந்த சர்வே மூலம் கூற உள்ளோம்.

காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணிக்கு சிறுபான்மையினர், மக்களிடம் ஆதரவு அதிகமாக கண்டிப்பாக இருக்கும். இந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மூன்றில் ஒரு பங்கு மகளீருக்கும் அத்துடன் சிறுபான்மையினருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதமும் வழங்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் தெரிவிக்க உள்ளோம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு சர்ச்சைக்குரிய மருத்துவரை நியமித்தது தவறு.தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் கூட புகழ்பெற்ற பல மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் யாராவது ஒரு மருத்துவரை நியமித்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஸ்ரீவித்யாகணபதி, நகர் தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story