தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2020 10:00 PM IST (Updated: 30 Oct 2020 9:39 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வினரை கண்டித்து கோவையில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை கேலியாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ந் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதனை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 28 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நடந்து வந்தனர். அவர்கள், தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பேசும் போது, கோவையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தி.மு.க.வினர் குறி வைத்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எங்களோடு தி.மு.க.வினர் போட்டி போட முடியாது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அ.தி.மு.க. அரசை குறை கூறுவதை தி.மு.க.வினர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சி காலத்தில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் வெற்று அரசியல் நடத்தும் தி.மு.க.வினருக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலை அணிந்தும் கலந்து கொண்டனர். அவர்கள், தி.மு.க.வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்தபடி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வெ.தாமோதரன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம், மாவட்ட துணை செயலாளர் சிங்கை முத்து, இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பப்பாயா ராஜேஷ், பகுதி செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், டி.ஜே.செல்வகுமார், ராஜ்குமார், பிந்து பாலு, பகுதி துணை செயலாளர் ஆர்.கே.சி. செந்தில்வேல், அசோக்குமார், வார்டு செயலாளர்கள் கொ.க.சக்திவேல், கணேசன், டாஸ்மாக் நெடுமாறன், பால்ராஜ், முத்தையா, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க செயலாளர் ஏ.கண்ணன், பஞ்சாலை கோபால் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சி.டி.சி.சின்ராஜ் தலைமையில் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை பீளமேடுபுதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம், மாவட்ட துணை செயலாளர் சிங்கை முத்து, முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி, பகுதி செயலாளர்கள் தம்பு என்கிற மவுனசாமி, வெள்ளிங்கிரி மற்றும் கட்சி நிர்வாகிகள் சரவணன், வக்கீல் விமல்சோமு, புரட்சி தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் முனபு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் கே.பி.ராஜூ, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், நஞ்சுண்டாபுரம் பகுதி செயலாளர் சாரமேடு எம்.சந்திரசேகரன், மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.தமிழ்முருகன், காளப்பட்டி கே.எல்.செந்தில்குமார், அமைப்பு சாரா ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் என்.ஜெயகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவை மாநகர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story