வேறு இடத்திற்கு மாற்றக்கோரி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீரபாண்டி,
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் அந்த கடை வேறு இடத்திற்கு மாற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு உடனடியாக டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீசார், மற்றும் உதவி கமிஷனர் நவீன்குமார் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் மாலை வரை போராட்டம் நடைபெற்றது. பின்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story