அவினாசி அருகே, குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி - விஷத்தை தட்டி விட்டு ஓடியதால் சிறுமி உயிர்தப்பினாள்
அவினாசி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஷத்தை தட்டி விட்டு ஓடியதால் சிறுமி உயிர்தப்பினாள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ் (வயது 36). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (27). இவர்களது குழந்தைகள் தட்சண்யா (5), அனனியா (2). சத்யா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடந்த சில நாட்களாக சத்யா மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சதீஸ் வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் சத்யாவும், அவருடைய 2 மகள்களும் இருந்தனர். அப்போது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றிய சத்யா, அதை தனது 2 மகள்களுக்கும் கொடுக்க முயன்றார்.
அப்போது கசப்பாக இருக்கிறது, எனக்கு வேண்டாம் அம்மா? என்று கூறிய சிறுமி தட்சண்யா அந்த டம்ளரை தட்டி விட்டு பக்கத்து வீட்டிற்கு ஓடி விட்டாள். ஆனால் குழந்தை அனனியா, தயார் கொடுத்த விஷத்தை குடித்தது. அதன்பின்னர் மீதி இருந்த விஷத்தை சத்யாவும் குடித்தார். இதனால் அனன்யாவும், சத்யாவும் சிறிது நேரத்தில் வீட்டில் மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையில் தனக்கு கசப்பான ஏதோ ஒன்று கொடுக்க முயன்றதையும், அதை வேண்டாம் என்று தட்டி விட்டு ஓடிவந்து விட்டதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தட்சண்யா கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே சத்யாவின் வீட்டிற்கு வேகமாக வந்தனர்.
அதற்குள் அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் சத்யாவும், அனனியாவும் கிடந்தனர். உடனே அவர்கள் இருவரையும் மீட்டு திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனன்யாவை பரிசோதனை செய்த டாக்டர், அந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். சத்யாவுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் தட்சண்யாவுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிறுமி நலமுடன் இருக்கிறாள். இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று குழந்தை அனனியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story