கோவில்பட்டி அருகே, சங்கிலி பறிப்பில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவில்பட்டி அருகே சங்கிலி பறிப்பில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவில்பட்டி,
கயத்தாறு அருகே தெற்கு மயிலோடையை சேர்ந்த உடையார் மனைவி மகேஸ்வரி (வயது 35). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி கயத்தாறு - கடம்பூர் சாலை நொச்சிகுளம் விலக்கு அருகே சென்றபோது, பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதேபோல், நாலாட்டின்புத்தூரை அடுத்த கட்டாலங்குளத்தை சேர்ந்த புனித அந்தோணி மனைவி ரீட்டாள் (65). இவர் கட்டாலங்குளம் பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் முக்கு ரோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவை சேர்ந்த காந்தி மகன் அய்யனார் (30), அவரது நண்பர் வாழமலை மகன் சூர்யா (20) ஆகியோர் என்பதும், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளையும் மீட்டனர்.
இந்நிலையில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கோவில்பட்டி துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவுப்படி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் பேரூரணி சிறையில் உள்ள இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்களை, கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story