மடத்துக்குளம் அருகே சம்பவம்: அமராவதி ஆற்றில் மூழ்கி மகனுடன் டாக்டர் பலி - கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது பரிதாபம்
மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி மகனுடன் டாக்டர் பலியானார். கோவிலுக்கு சாமிகும்பிட வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
மடத்துக்குளம்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த ஜோத்தம்பட்டி அவனலிங்கம்பிள்ளை வீதியை சேர்ந்தவர் டாக்டர் ஜோதிலிங்கம் (வயது 42). இவருடைய மனைவி கவிதா (32). இவர்களது மகள் ஸ்ரீனிகா (14), மகன் சர்வேஸ்வரன் (11). ஜோதிலிங்கம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார். ஸ்ரீனிகா அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். சர்வேஸ்வரன் 6-ம் படித்து வந்தான்.
ஜோதிலிங்கத்தின் சொந்த ஊரான ஜோத்தம்பட்டி அருகே கடத்தூரில் அமராவதி ஆற்றங்கரையில் அர்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு ஊர்களிலும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அதன்படி சென்னையில் குடியிருந்து வந்த ஜோதிலிங்கம் தனது குடும்பத்துடன் ஜோத்தம்பட்டி வந்தார். பின்னர் அனைவரும் நேற்று காலையில் அர்சுனேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
சாமியை தரிசனம் செய்யும் முன்னர் அமராவதி ஆற்றில் குளிக்க ஜோதிலிங்கம் முடிவு செய்தார். அதன்படி ஜோதிலிங்கம், கவிதா, ஸ்ரீனிகா மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் அமராவதி ஆற்றுக்கு சென்றனர். கரையில் கவிதாவும், ஸ்ரீனிகாவும் நின்றுகொண்டனர். ஜோதிலிங்கமும், சர்வேஸ்வரனும் குளிப்பதற்கு ஆற்றுக்குள் இறங்கினர்.
தற்போது அமராவதி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அப்போது தந்தையும், மகனும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திடீரென்று அவர்கள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். அப்போது “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினர்.
இதையடுத்து கரையில் நின்று கொண்டிருந்த கவிதாவும், ஸ்ரீனிகாவும் பதற்றம் அடைந்து அருகில் நின்றுகொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். உடனே அவர்களும் ஓடிவந்து ஆற்றுக்குள் இறங்கி தந்தை-மகனை தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கும், மடத்துக்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் விரைந்து சென்று ஆற்றுக்குள் இறங்கி, தந்தை-மகனை தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் தண்ணீருக்கு அடியில் உள்ள புதைமணலில் தந்தை-மகன் இருவரும் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழந்த நிலையில் தந்தை-மகன் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இருவரின் உடல்களை பார்த்ததும் கவிதாவும், ஸ்ரீனிகாவும் கதறி அழுது, கண்ணீர் வடித்தது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த டாக்டர், தனது மகனுடன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story