தண்ணீர் இல்லாமல் கதிர் பிடிப்பது பாதிப்பு: மழையை எதிர்நோக்கி பூத்திருக்கும் மக்காச்சோளம்
கதிர் பிடிக்காத நிலையில், பூத்துக்குலுங்கும் மக்காச்சோள பயிர்கள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரம் எக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில் 54 சதவீத நிலம் மானாவாரி ஆகும். இந்த மானாவாரி நிலங்களில் மழை காலங்களில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்த மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மாவட்டம் முழுவதும் மானாவாரி நிலங்களை விவசாயிகள் உழவு செய்து, சாகுபடி செய்யத் தொடங்கினர்.
இதில் மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டன. ஆனால், அதன்பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்யவில்லை. எப்போதாவது ஒருநாள் லேசான சாரல் மட்டுமே பெய்தது. இந்த சாரல் மழை பயிர்களுக்கு போதுமானதாக இல்லை. எனினும், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்து விடும் என்று விவசாயிகள் நினைத்தனர்.
ஆனால், தென்மேற்கு பருவமழையை போன்றே வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கடந்த ஒரு மாதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்கள் கருகி விட்டன. அதேநேரம் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோள பயிர்கள் பூத்து குலுங்குகின்றன.
பொதுவாக மக்காச்சோளம் பயிர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியதும், பக்கவாட்டில் கதிர் பிடிக்க ஆரம்பித்து விடும். ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததால், கதிர் பிடிக்கவில்லை. மேலும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பழுப்பு நிறத்துக்கு மாறிவிட்டன. ஆனால், தாமதமாக சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் ஓரளவு பச்சையாக உள்ளன.
அவை தற்போது பூக்க தொடங்கி உள்ளன. இந்த நேரத்தில் பருவமழை பெய்தால் அவற்றில் கதிர் பிடிக்க ஆரம்பிக்கும். இதனால் பருவமழையை நோக்கி மக்காச்சோளமும், அதை பயிரிட்ட விவசாயிகளும் விண்ணை பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து பாலம்ராஜக்காபட்டியை சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி கூறுகையில், பருவமழை நன்றாக பெய்யும் என்று நினைத்து ஆவணி மாதம் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தோம். இதில் மக்காச்சோளம் பூக்க தொடங்கிய நிலையில், மழை பெய்யாததால் கதிர் பிடிக்கவில்லை. இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களும் மழையின்றி கருகி வருகின்றன. எனவே, மழையின்றி கருகிய மானாவாரி பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story