லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை பரிதாப சாவு


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை பரிதாப சாவு
x
தினத்தந்தி 30 Oct 2020 9:30 PM GMT (Updated: 2020-10-31T07:48:05+05:30)

சூளகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே ஜிஞ்சேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் பூவரசன் (வயது22). இவர் பேரிகையில், ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று மாலை புதுமாப்பிள்ளை பூவரசன் வேலை முடிந்து பேரிகையில் இருந்து சூளகிரி வழியாக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். சாமல்பள்ளம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பூவரசன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூவசரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று புதுமாப்பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பூவரசனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story