ஆண்டிமடத்தில் பரபரப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்
ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, திருமாவளவனை கைது செய்ய வேண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டிக்கவில்லை என மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி, போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் முஹம்மது இத்ரீஸ், சந்திரகலா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பேசுவதற்காக, மைக் மற்றும் ஒலிபெருக்கியை பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால், மைக் மூலம் பேச அனுமதியில்லை என்று கூறி, மைக் மற்றும் ஒலிபெருக்கியை பயன்படுத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கும்பகோணம்- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 10 நிமிடத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.
Related Tags :
Next Story