திருச்சியில் ரூ.6 கோடி கேட்டு தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது - முக்கிய குற்றவாளியும் பிடிபட்டார்
திருச்சியில் ரூ.6 கோடி கேட்டு தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியும் பிடிபட்டார்.
திருச்சி,
திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் கண்ணப்பன். இவரது மகன் கிருஷ்ணன் என்ற முத்தையா (வயது 12). கடந்த 28-ந் தேதியன்று மாலை 5 மணியளவில் வீட்டின் முன்பு கிருஷ்ணன், சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல், சிறுவன் கிருஷ்ணனை கடத்திச் சென்றது.
பின்னர், சிறுவனின் உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள், கிருஷ்ணனை தாங்கள் கடத்தியிருப்பதாகவும், ரூ.6 கோடி கொடுத்தால் சிறுவனை உயிருடன் விடுவதாகவும், இல்லையேல் நடப்பதே வேறு என மிரட்டி உள்ளனர்.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில், உடனடியாக மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கண்ணப்பனின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, அதன்மூலம் சிறுவன் கடத்தப்பட்ட காரை கண்டறிந்தனர். விசாரணையில், காரின் பதிவெண்ணும் போலியானது என தெரியவந்தது.
இந்தநிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் திருச்சி-வயலூர் சாலையில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இரு சக்கர வாகனங்களில் போலீசார் அந்த காரை துரத்திச் சென்றனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், திருச்சி ராமலிங்க நகர் விஸ்தரிப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், காரில் இருந்த சிறுவன் கிருஷ்ணனை பத்திரமாக மீட்ட போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தல் கும்பலை கண்டறிவதற்காக கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையிலும், சிறப்பு விரைவுப்படை சப்- இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் இரவு-பகலாக வாகன தணிக்கை செய்தும், சந்தேகப்படும் நபர்களை பிடித்தும் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், சிறுவன் கிருஷ்ணனை கடத்தியது 6-க்கும் மேற்பட்ட நபர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கண்டோன்மெண்ட் வார்னஸ் சாலையை சேர்ந்த மாணிக்க பாண்டியன், சரவணன் ஆகியோர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அண்ணன், தம்பிகளான இருவரும் தொழில் அதிபர் கண்ணப்பன் வசிக்கும் பகுதியிலேயே வசித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து மாணிக்க பாண்டியன், அவரது தம்பி சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான கீழக்குறிச்சியை சேர்ந்த ஜீவானந்தமும் போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது, கீழகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ், திருப்பதி ஆகியோர் தனது காரை இரவல் வாங்கி சென்றதாகவும், தனக்கும் சிறுவன் கடத்தலுக்கும் தொடர்பு இல்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.
மேலும் கடத்தலுக்கு உதவிய கூட்டாளிகள் செல்வகுமார், சதீஷ்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரகாஷ், திருப்பதி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
இந்தநிலையில் தலைமறைவான பிரகாஷ் மதுரையில் இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை தனிப்படை போலீசார் மதுரை விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நேற்று இரவு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 (பொறுப்பு 2) கார்த்திக் ஆசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து மாணிக்க பாண்டியன் உள்பட 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story