செண்பகத்தோப்பு அணை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்


செண்பகத்தோப்பு அணை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2020 4:00 AM IST (Updated: 31 Oct 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

செண்பகத்தோப்பு அணையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஷட்டர் சீரமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் அணை பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை கட்டும் பணி கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கி 2007-ல் நிறைவு பெற்றது. ஆனால் இந்த அணையில் 7 ஷட்டர்கள் அமைக்கப்பட்டும் சரிவர இயங்காமல் இருந்தது. எனவே அணையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சருக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையின் ஷட்டரை சீரமைக்க கடந்த ஆண்டு ரூ.16 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஷட்டர் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் செண்பகத்தோப்பு அணையில் நேற்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர் செல்வம், தூசி மோகன் ஆகியோர் ஷட்டரை சோதனை முறையில் இயக்கி ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கூறுகையில், செண்பகத்தோப்பு அணையில் செயல்படாமல் இருந்த ஷட்டர்கள் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்று செண்பகத்தோப்பு அணை எதிர்வரும் மழை காலங்களில் தண்ணீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த அணை விவசாய பயன்பாட்டுக்கு வரும். தற்போது 47 அடி உயரம் மட்டுமே தண்ணீரை சேமிக்கும் நிலை இருந்தது. ஷட்டர் அமைத்தபின் 62 அடி உயரம் முழு கொள்ளளவு சேமிக்கப்பட்டு இந்த அணையில் 287 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும். இதன் மூலம் போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யார், ஆற்காடு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 48 ஏரிகளின் மூலம் 7 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் செண்பகத்தோப்பு அணையின் பழுதடைந்துள்ள கரை, வடிகால், அணையின் சாலைகள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் அணையின் கீழ் உள்ள பழுதடைந்த அலியாபாத் அணைக்கட்டு ஆகியவற்றை புனரமைக்க ரூ.14 கோடியே 25 லட்சத்தில் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது” என்றார்.

திருவண்ணாமலை பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மகேந்திரன், ஆரணி உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார், ஆவின் துணைத் தலைவர் பாரி பாபு, ஆரணி தொகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் சங்கர், கஜேந்திரன், திருமால், அசோக்குமார், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சி அம்மாள், முன்னாள் கவுன்சிலர் ரகு உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story