வாணியம்பாடி அருகே, ஓடும் பஸ்சில் நகை திருடிய 3 பெண்கள் கைது - தப்பி ஓடியவர்களை பிடித்தபோது பெண் போலீஸ் காயம்
வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சில் நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடமுயன்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அப்போது பெண் போலீசுக்கு காயம் ஏற்பட்டது.
வாணியம்பாடி,
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு ஓசூர் சென்றிருந்தார். பின்னர் மீண்டும் அரசு பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஹரிகிருஷ்ணன் மகள் சுமார் 5 பவுன் நகையை தன்னுடைய கைப்பையில் வைத்திருந்தார். அப்போது அறிமுகம் இல்லாத 3 பெண்கள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளனர்.
பஸ் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்கச்சாவடி வந்தபோது உடன் அமர்ந்திருந்த 3 பெண்கள் சுங்கச்சாவடியில் இறங்கினர். அப்போது அரிகிருஷ்ணன் மகள் நகை வைத்திருந்த கைப்பை திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பையை சோதனை செய்ததில் அதில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதனை தொடர்ந்து அவர் பஸ்சில் இருந்து இறங்கிய பெண்கள் நகையை திருடியதாக கூறி கூச்சலிட்டார்.
உடனே சுங்கச்சாவடி ஊழியர்கள், பஸ்சில் இருந்து இறங்கிய 3 பெண்களை மடக்கி பிடித்து சுங்கச்சாவடி பகுதியில் உள்ள புறகாவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது 3 பெண்களும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்கும் போது பெண் போலீஸ் கல்பனாவுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்ததும் அம்பலூர் போலீசார் விரைந்து சென்று பிடிபட்ட 3 பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த காவியா (வயது 30), பாரதி (28), சுனிதா (34) என்பது தெரிய வந்தது. மேலும் பஸ்சில் திருடிய நகையை கைப்பற்றினர். மேலும் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story