லஞ்சஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை: 3 டாஸ்மாக் கடைகளில் ரூ.60 ஆயிரம் பறிமுதல் - கள்ளச்சந்தையில் ரூ.4 லட்சம் மதுபாட்டில் விற்பனைக்கு கொடுத்தது அம்பலம்


லஞ்சஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை: 3 டாஸ்மாக் கடைகளில் ரூ.60 ஆயிரம் பறிமுதல் - கள்ளச்சந்தையில் ரூ.4 லட்சம் மதுபாட்டில் விற்பனைக்கு கொடுத்தது அம்பலம்
x
தினத்தந்தி 31 Oct 2020 3:15 AM IST (Updated: 31 Oct 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

வேலூர், பென்னாத்தூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் கள்ளச்சந்தையில் ரூ.4 லட்சம் மதுபாட்டில் விற்பனைக்கு கொடுத்தது அம்பலமானது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. மிலாதுநபியைமுன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நேற்று முன்தினம் மதபானங்கள் வாங்க மதுபிரியர்கள் கடைகளில் அலைமோதினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.

இதனால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சோதனை நடந்தபோது மதுபானங்கள் விற்பனை செய்யப்படாததால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தசோதனை நேற்று அதிகாலை வரை விடிய, விடிய நடந்தது.

சோதனையின் போது விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் மூலம் பெறப்பட்ட பணத்துக்கும், இருப்பில் உள்ள பணத்துக்கும் ஒப்பீடு செய்து கணக்கெடுத்தனர். இதில் 3 கடைகளையும் சேர்த்து ரூ.60 ஆயிரத்து 900 கூடுதலாக வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. பென்னாத்தூரில் உள்ள ஒரு கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்க வெளியில் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மற்றும் பென்னாத்தூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story