தேவர், மருதுபாண்டியர்கள் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவிப்பு
மதுரையில் தேவர், மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்திருந்தார். முதல்-அமைச்சர் வேட்பாள ராக அறிவிக்கப்பட்ட பின்பு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி மதுரை வந்திருந்ததால் அ.தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின், எடப்பாடி பழனிசாமி மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அங்கு அவரை அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் சந்தித்து பேசினர்.
நேற்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் புறப்பட்டார். முன்னதாக அவர் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்போது வழிநெடுகிலும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அதி.மு.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.
கோரிப்பாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை வணங்கினார். அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்தார். அதன்பின் அவர்கள் தேவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த முத்துராமலிங்க தேவர் படத்திற்கும் மரியாதை செலுத்தினர். அதன்பின் முதல்-அமைச்சர் தெப்பக்குளம் சென்றார். அப்போது வழிநெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
அங்குள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், காமராஜ், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் வீரவாள் பரிசு வழங்கப்பட்டன. அதனை அவர்கள் பெற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின், முதல்-அமைச்சர் கார் மூலம் பசும்பொன் புறப்பட்டு சென்றார்.
மதுரை திருநகரில் உள்ள பசும்பொன் தெருவில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் அவரது 113-வதுகுருபூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவை ஒட்டி அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு அதில் தேவரின் உருவப்படம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்தநிலையில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அறக்கட்டளை தலைவர் கலைவாணி கண்ணன் தலைமை தாங்கி தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார். இதனையடுத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் செயலாளர் லட்சுமணன், பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், ஜெயக்கொடி, சிவராஜ் ராஜப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குருபூஜையையொட்டி அன்னதானம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேவரின்உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், துணைச்செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பரங்குன்றம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் இந்திரா காந்தி பகுதி செயலாளர் உசிலை சிவா, வட்டச்செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்மாபட்டி பாண்டியன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கையெழுத்து இயக்க பொறுப்பாளர் பழனிகுமார் ஆகியோர் தலைமையில் தேவரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தினர் மாலை அணிவித்தனர்.
தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையிலும், மாநகர், மாவட்ட ம.தி.மு.க.வினர் அதன் செயலாளர் பூமிநாதன் தலைமையிலும், மாநகர் மாவட்ட அ.ம.மு.க.வினர் மாவட்ட செயலாளர்கள் மகேந்திரன், ராஜலிங்கம், ஜெயபால் ஆகியோர் தலைமையிலும், மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மாநில நிர்வாகி கிட்டு தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரும், முன்னாள் எம்.ல்.ஏ. சந்தானம் பிரிவு பார்வர்டு பிளாக் கட்சியினர் இளங்கோவன் தலைமையிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் சார்பாக மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வரன், மாநில தலைவர் நவமணி, ஐ.என்.ஏ. தியாகி சாமிதேசிகன் ஆகியோர் தலைமையிலும், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் டாக்டர் கணேசன் தலைமையிலும், இந்திய ஜனநாயக கட்சியினர் மாநகர் மாவட்ட தலைவர் அன்னை இருதயராஜ், செயலாளர் ஞானசேகர், பொருளாளர் சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் தலைமையிலும், மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையிலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாநர் மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் தலைமையிலும் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story