சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுபாக்கம்,
வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுபாக்கம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மார்க்கத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சரக்கு வாகனம் வேகமாக வந்தது. அந்த வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர், சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றார்.
உடனே போலீசார் தங்களது வாகனங்களில் துரத்திச்சென்று, 5 கிலோ மீட்டர் தொலையில் அந்த சரக்கு வாகனத்தை மடக்கினர். உடனே டிரைவரும், அவருடன் வந்தவரும் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 2 பேரையும் பிடித்தனர்.
இதையடுத்து போலீசார், அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைபெட்டிகளில் ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த சரக்கு வாகனத்தையும், புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த மகுடஞ்சாவடியை சேர்ந்த டிரைவர் தனபால்(வயது 28), உதவியாளர் ஆனந்த்(28) ஆகியோர் என்பதும், சேலத்தில் இருந்து புகையிலை பொருட்களை விருத்தாசலத்திற்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வாகன உரிமையாளரான மகுடஞ்சாவடியை சேர்ந்த மதன்(38) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story