வாங்கிய கடனை கட்டாததால் அதிகாரிகள் எச்சரிக்கை மாற்றுத்திறனாளி மனைவி, பிள்ளைகளுடன் தொழிலாளி தற்கொலை முயற்சி - களியக்காவிளை வங்கி முன்பு பரபரப்பு


வாங்கிய கடனை கட்டாததால் அதிகாரிகள் எச்சரிக்கை மாற்றுத்திறனாளி மனைவி, பிள்ளைகளுடன் தொழிலாளி தற்கொலை முயற்சி - களியக்காவிளை வங்கி முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 31 Oct 2020 12:00 PM IST (Updated: 31 Oct 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

வாங்கிய கடனை கட்டாததால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால், மாற்றுத்திறனாளி மனைவி, பிள்ளைகளுடன் தொழிலாளி களியக்காவிளையில் உள்ள ஒரு வங்கி முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மேக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 50), தொழிலாளி. இவருடைய மனைவி சிந்துகலா, மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு சிவ பிரசாத் (18) என்ற மகனும், நயனா, நந்தனா (15) என்ற இரட்டை மகள்களும் உள்ளனர்.

இதில் பிள்ளைகள் 3 பேரும் பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகளாவர். மகன் நாகர்கோவிலில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியிலும், மகள்கள் 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கூலி வேலை செய்து ஸ்ரீகுமார், மனைவி, பிள்ளைகளை பாதுகாத்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனமழை காரணமாக ஸ்ரீகுமாரின் குடிசை முற்றிலும் சேதமடைந்தது. இதனால், ஆதரவற்ற நிலையில் இருந்த அவர், வீடு கட்டுவதற்காக பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கும் திட்டம் மூலம் பயன்பெற வங்கி மற்றும் அரசு அதிகாரிகளை பலமுறை நாடினார். ஆனால் வங்கிகளும், அதிகாரிகளும் நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஸ்ரீகுமார் கடந்த 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை களியக்காவிளையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்து 400 கடன் பெற்று வீட்டை கட்டினார். இதற்கிடையே அவருடைய மனைவிக்கு முதுகெலும்பில் ஏற்பட்ட நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் பல லட்சம் செலவில் அறுவை சிகிச்சை முடிந்து தொடர் சிகிச்சையில் உள்ளார். இதனால், வங்கி கடன் கட்ட முடியாத நிலை உருவானது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் போனதால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையில், வங்கி கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீகுமார் வீட்டிற்கு சென்று கடன் மற்றும் வட்டியுடன் பணத்தை நவம்பர் 10-ந் தேதிக்குள் கட்ட வேண்டும். இல்லை என்றால் வீட்டை ஏலம் விடுவதாக வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். சரியான வேலையில்லாமல் வறுமையில் தவித்து வரும் நிலையில் வங்கி அதிகாரிகள் நெருக்கடியால் ஸ்ரீகுமார் மனமுடைந்தார்.

நேற்று முன்தினம் காலை ஸ்ரீகுமார் குடும்பத்துடன் வங்கி முன்பு வந்தார். பின்னர், வீட்டை ஏலம் விட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய போவதாக கூறினார். இதையடுத்து அங்கு நின்றவர்கள் அவர்களை தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பல லட்சம், பல கோடிகள் வங்கி கடன் பெற்று கட்டாமல் இருப்பவர்கள் மீது வங்கிகள் கண்டு கொள்ளாமலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் உள்ளது. நான்கு ஊனமுற்றோரை காப்பாற்ற வழியின்றி வறுமையில் தவிக்கும் ஸ்ரீகுமாரின் கடன் தள்ளுபடி செய்து தற்கொலை முயற்சியில் இருந்து பாதுகாக்க முதல்-அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த ஊனமுற்றோரின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Next Story