அந்தேரியில் பயங்கர விபத்து: கிரேன் மோதி இளம்பெண் பலி - 2 பேர் படுகாயம்


அந்தேரியில் பயங்கர விபத்து: கிரேன் மோதி இளம்பெண் பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Nov 2020 3:00 AM IST (Updated: 1 Nov 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரியில் கிரேன் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரி டி.என். நகரில் இருந்து தகிசர் வரையிலான மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட கிரேன் வாகனம் ஒன்று நேற்று காலை 6 மணி அளவில் தாதரில் இருந்து ஜோகேஸ்வரி நோக்கி மேற்கு விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை வினோத் யாதவ் என்பவர் ஓட்டினார்.

அந்தேரி காந்தாவாடி பஸ் நிறுத்தம் அருகே கிரேனின் அச்சு திடீரென முறிந்தது. இதனால் நிலை தடுமாறிய கிரேன் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக திரும்பிய கிரேன் பஸ் நிறுத்தம், அங்கு நின்ற ஆட்டோ மற்றும் மெட்ரோ தூண் மீது மோதி சரிந்து விழுந்தது.

இதில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண் உள்பட 3 பேர் கிரேன் மோதியதில் சிக்கி கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உடல் நசுங்கி பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த உடனே கிரேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியான பெண் பால்குனி பட்டேல் (வயது26) என்பது தெரியவந்தது.

விபத்து பற்றி அறிந்த மும்பை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் மூர்த்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கிரேன் சரிந்து விழுந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் பணியில் அலட்சியம் மற்றும் சேதத்துக்காக ஒப்பந்ததாரரிடம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

Next Story