காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்


காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்
x
தினத்தந்தி 1 Nov 2020 6:23 AM IST (Updated: 1 Nov 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது மூதாட்டி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஸ்ரீரங்கம், 

புதுக்கோட்டை மாவட்டம், மார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மனைவி லீலாவதி (வயது 72). நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக திருச்சிக்கு லீலாவதி வந்தார்.

பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு லீலாவதி வந்தார். அங்கு அவர், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.

தீயணைப்பு துறையினர் மீட்டனர்

அவர், தண்ணீரில் தத்தளித்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று குரல் எழுப்பினார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் அம்மா மண்டபம் அருகில் உள்ள கருமண்டபம் படித்துறை அருகில் இருந்து, லைப் ஜாக்கெட் மூலம் தண்ணீரில் மிதந்து சென்ற, மூதாட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story