பா.ஜனதாவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படுமா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்


பா.ஜனதாவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படுமா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்
x
தினத்தந்தி 1 Nov 2020 2:42 AM GMT (Updated: 1 Nov 2020 2:42 AM GMT)

பா.ஜனதாவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள் ஒதுக்கீடு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மீட்பு பொதுக்கூட்டம் நடத்த போவதாக கூறுவது தேவையற்றது. இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிட, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பினார். தற்போது கவர்னரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் பங்கு எங்கே உள்ளது? அவரோ அல்லது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களோ என்றாவது சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசியிருப்பார்களா? முன்பு ஜெயலலிதா 69 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிட 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றியுள்ளார்.

பா.ஜனதா வேல் யாத்திரை

தி.மு.க.வினர் தேர்தல் நேரத்தில்தான் மக்களை சந்திப்பார்கள். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்போதும் மக்களுடன் இணைந்து செயலாற்றுகிறார். மு.க.ஸ்டாலினோ கணினி முன்பு அமர்ந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார்.

மனுதர்ம நூலில் பல ஆயிரம் நல்ல கருத்துகள் உள்ளது. அதனை விடுத்து, ஆங்கில ஆசிரியர் கூறினார் என்று இந்துக்களை அவமதிக்கும் கருத்துகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி வருகிறார். ஜனநாயக நாட்டில் முறையாக நடத்தப்படும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோன்று பா.ஜனதாவின் வேல் யாத்திரைக்கும் அனுமதி வழங்கப்படலாம்.

3-வது அணி

நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர். அவர் தனது வயது முதிர்வின் காரணமாக, கட்சி ஆரம்பிப்பது காலதாமதமாவது குறித்து வெளியான தகவலை ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது புதிய கட்சியை தொடங்கி, மக்கள் மத்தியில் கொண்டு செல்வது கடினமானதுதான். பல லட்சம் ரசிகர்களையும், பொதுமக்களின் ஆதரவையும் பெற்றபோதும், மிகப்பெரிய மாநாடு நடத்தினால்தான் மக்கள் மத்தியில் கட்சியை பிரபலப்படுத்த முடியும். கொரோனா காலத்தில் இது சாத்தியமில்லை.

அ.தி.மு.க. திராவிடத்துடன் தெய்வ நம்பிக்கையும் கொண்ட கட்சி. அண்ணா ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றார். எம்.ஜி.ஆர். அன்னை மூகாம்பிகா கோவிலுக்கு சென்று வேல் கொடுத்தார். ஜெயலலிதா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி அ.தி.மு.க.. பா.ஜனதாவின் கொள்கை வேறு. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story