14 வயது சிறுமிக்கு திருமணம்: புதுமாப்பிள்ளை உள்பட 5 பேர் கைது
14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக புதுமாப்பிள்ளை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை,
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சிங்கிலியன்கோம்பை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 28). இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் அங்குள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்துருட்டு கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரி மங்களபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, மங்களபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சொக்கநாதபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டத்தை மீறி குழந்தை திருமணம் நடத்திய புதுமாப்பிள்ளை முத்துக்குமார், அவருடைய தந்தை அங்கமுத்து (50), தாய் ஜோதி (45) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 5 பேரையும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து முத்துக்குமார், அங்கமுத்து உள்பட 3 பேரை ராசிபுரம் சிறையிலும், ஜோதி உள்பட 2 பேரை சேலத்தில் உள்ள பெண்கள் சிறையிலும் போலீசார் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story