பவுர்ணமி கிரிவலம் ரத்தால் வெறிச்சோடிய கிரிவலப்பாதை கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா ஊரடங்கால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 6.41 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 8.45 மணிக்கு நிறைவடைந்தது. ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. மேலும் கிரிவலம் சென்ற பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
அதைத்தொடர்ந்து 2-ம் நாளான நேற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பக்தர்கள் சிலர் தனித்தனியாக கிரிவலம் சென்றனர். போலீசார் யாரையும் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே காணப்பட்டது.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story