செல்போனில் ஆபாசபடம் எடுத்து மிரட்டல்: மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் - நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா


செல்போனில் ஆபாசபடம் எடுத்து மிரட்டல்: மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் - நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா
x
தினத்தந்தி 1 Nov 2020 4:45 PM IST (Updated: 1 Nov 2020 4:38 PM IST)
t-max-icont-min-icon

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

காட்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயதுடைய பெண். இவர் நேற்று விருதம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. நான் குடும்ப சூழ்நிலை காரணமாக விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் வேலைக்கு சென்றேன். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு என்னுடைய பிறந்தநாளை அலுவலகத்தில் அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம். அன்று எனக்கு விருந்து வைப்பதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் காரில் கசம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் எனக்கு தின்பண்டங்களை கொடுத்தார். பின்னர் நான் மயங்கினேன். அப்போது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை அவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டார். அப்போது தான் அவர் தந்த தின்பண்டங்களில் மயக்க மருந்து கலந்திருந்தது எனக்கு தெரியவந்தது.

அன்று முதல் அவர் அந்த வீடியோவை என்னிடம் அடிக்கடி காண்பித்து பாலியல் தொந்தரவு செய்தார். அப்போதும் அவர் அதை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டார். இதனால் நான் வேலையில் இருந்து நின்று விட்டேன். தொடர்ந்து அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து என்னை தாக்கினார். கடந்த 27-ந் தேதி அன்று அவர் என்னை மிரட்டினார். மேலும் அவர், தனது ஆசைக்கு என்னை இணங்க வற்புறுத்தினார். அவரது பேச்சை நான் கேட்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும், அவர் வைத்துள்ள எனது 6 வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து அப்பெண் தர்ணாவை கைவிட்டார். அவரின் மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story