பவுர்ணமி சிறப்பு பூஜை: சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்
பவுர்ணமியில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர்.
காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிந்த பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் முடிக்காணிக்கை செலுத்தினர். பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பவுர்ணமி சிறப்பு பூஜையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் மலைப்பாதையிலுள்ள நீரோடையில் நீர்வரத்து இருந்தது.
எந்த நேரம் வேண்டுமானாலும் மழை பெய்யும் சூழல் இருந்ததால் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர்.
நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அடிவாரத்தில் மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் சிறிய மழைக்கே நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இல்லை.
மலையேறி செல்லும் பக்தர்கள் மூச்சுத்திணறல், மாரடைப்பு ஏற்பட்டு போதிய மருத்துவ வசதி மலைப்பகுதியில் இல்லாததால் இறக்கின்றனர். மருத்துவ வசதி இல்லாததால் இந்த நிலைமை தொடர்கதையாகி கொண்டு இருக்கிறது. எனவே மலைப்பாதையில் குறைந்தது 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். அப்போது தான் பக்தர்களுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்ய ஏதுவாக இருக்கும். பக்தர்களின் இறப்பையும் தடுக்கலாம். எனவே வருங்காலங்களில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story