விஷம் குடித்து வாலிபர் இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
மானாமதுரை அருகே விஷம் குடித்து வாலிபர் இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
மானாமதுரையை அடுத்த கீழப்பிடாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது24). கடந்த 29-ந்தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரமேசை சிலர் பணம்கேட்டு மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவே அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மு.கண்ணகி, நகர் செயலாளர் எம்.எஸ்.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் விஸ்வநாதன், சந்திரன், நாகராஜ், கணேசன் உள்பட பலர் சிவகங்கை-மானாமதுரை ரோட்டில் பஸ்மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.
தகவல் அறிந்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் போலீசாருடன் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர் சேது ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துபேசி இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story