மதுரையில் நள்ளிரவில் பலத்த மழை: சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை கடக்க முயன்றவர் மூழ்கி சாவு - டிரான்ஸ்பார்மர், மரங்கள் சாய்ந்தன


மதுரையில் நள்ளிரவில் பலத்த மழை: சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை கடக்க முயன்றவர் மூழ்கி சாவு - டிரான்ஸ்பார்மர், மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 1 Nov 2020 6:30 PM IST (Updated: 1 Nov 2020 6:21 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை கடக்க முயன்றவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதே போல் டிரான்ஸ்பார்மரும், ஆங்காங்கே மரங்களும் சாய்ந்தன.

மதுரை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில தினங்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. மதுரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. நேரம் ஆக, ஆக பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் 5 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்தது.

இதனால் நகரில் பெரியார் பஸ்நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், புதூர், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், காளவாசல், திருப்பரங்குன்றம் சாலை என அனைத்து சாலைகளிலும் மழைநீர் ஆறாக ஓடியது. நள்ளிரவில் வாகன ஓட்டிகள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் அதற்காக தோண்டிய குழிகளில் எல்லாம் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சி அளித்தன.

ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே மதுரை நகர் தாக்குப்பிடிக்காத நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் புகுந்தது. அது தவிர காலையில் கடை திறக்க வந்த போது கடையில் தண்ணீர் புகுந்திருப்பதை கண்ட வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மழைக்கு ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் வேரோடு சாய்ந்தன. இரவு நேரம் என்பதால் அவற்றை யாரும் அகற்றவில்லை. விடிந்த பின்னரே அவற்றை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

மணிநகரம் அருகே கர்டர்பாலத்தின் ரெயில்வே சுரங்கப்பாதையில் பலத்த மழை காரணமாக சுமார் 6 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது.

மதுரை புதூர் ஜவகர்புரத்தை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 65). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியரான இவர், நேற்று முன்தினம் பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தனது வீட்டிற்கு சைக்கிளில் கர்டர் பாலம் வழியாக சென்றுள்ளார். பாலத்தின் கீழே சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருப்பது தெரியாமல் சைக்கிளுடன் இறங்கி அதனை கடக்க முயன்றார். அப்போது பாலத்தின் நடுவே பள்ளத்தில் சைக்கிள் சிக்கியதால் அவர் தவறி கீழே விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்து கரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள்சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி, மேலூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனி பார்த்தசாரதி தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று பலத்த மழைக்கு திடீரென்று சாய்ந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த சத்தம் கேட்டு அந்த பகுதிமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது.

இது குறித்து தகவல் அறிந்தும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரிசெய்யும் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் தனியார் இன்டர்நெட் நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக டிரான்ஸ்பார்மர் அருகே பள்ளம் தோண்டி உள்ளனர். அவர்கள் அந்த பள்ளத்தை சரியாக மூடாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பலத்த மழையால் பள்ளத்திற்குள் தண்ணீர் புகுந்து அதன் காரணமாக டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிகிறது.

மதுரை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- விரகனூர்-101.50, விமான நிலையம்-81.10, திருமங்கலம் 74.60, சோழவந்தான்-30, சிட்டம்பட்டி-28.20, கள்ளந்திரி-20.60, மதுரை வடக்கு-18.32, தல்லாகுளம்-14.20, வாடிப்பட்டி-11, பேரையூர்-2.

Next Story