கள்ளக்குறிச்சி அருகே, பிரசவத்தின் போது தாய், குழந்தை சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி அருகே, பிரசவத்தின் போது தாய், குழந்தை சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Nov 2020 7:15 PM IST (Updated: 1 Nov 2020 7:02 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே பிரசவத்தின் போது தாய், குழந்தை அடுத்தடுத்து இறந்தனர். இவர்களது சாவுக்கு மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அயல்துரை(வயது 25). தொழிலாளி. இவருக்கும் தியாகதுருகம் அருகே உள்ள நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகள் கற்பகம்(20) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கர்ப்பமான கற்பகத்திற்கு கடந்த மாதம் வளை காப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரசவத்துக்காக அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கற்பகத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை உறவினர்கள் அழைத்துச் சென்று தியாகதுருகம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த கற்பகத்தின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்த்ததாகவும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் பிறந்த சற்று நேரத்தில் குழந்தை இறந்தது என்றும் புகார் தெரிவித்தனர்.

இதை அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து கற்பகத்தின் உறவினர்களிடம் சமாதானம் பேசி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையே கற்பகத்தின் உடல்நிலை மோசமானதால், அவர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கருப்பையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கற்பகமும் பரிதாபமாக இறந்தார். பிரசவத்தின் போது தாயும், சேயும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து தாய் மற்றும் குழந்தை இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கற்பகத்தின் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று காலை திரண்டனர். அப்போது பிரேத பரிசோதனைக்கு பிறகு தாய் மற்றும் குழந்தையின் உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

பின்னர் கற்பகத்தின் உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமு, இளைஞரணி துணைச் செயலாளர் தமிழரசன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் கோரிக்கை தொடர்பாக புகார் கொடுங்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி உறுதியளித்தார். இதையடுத்து பா.ம.க. வினர் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து இறந்த தாய், குழந்தையின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கற்பகத்தின் கணவர் அயல்துரை தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது மனைவியும், குழந்தையும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் இறந்துவிட்டனர். எனவே அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட டாக்டர்கள், செவிலியர்கள், முதலுதவி சிகிச்சை அளித்த துப்புரவு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story