விழுப்புரம் அருகே, ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு - குளிக்க சென்றபோது பரிதாபம்


விழுப்புரம் அருகே, ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு - குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 1 Nov 2020 7:45 PM IST (Updated: 1 Nov 2020 8:00 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஏரியில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் முருகன் (வயது 11). இவரும் அதே கிராமம் குளத்துமேட்டுத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரஞ்சித் (10) என்பவரும் நண்பர்கள்.

இவர்களில் முருகன், மரகதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 6-ம் வகுப்பும், ரஞ்சித் அதே பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து முடித்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் இவர்கள், வீட்டில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் முருகன், ரஞ்சித் ஆகிய இருவரும் நேற்று பகல் 12 மணியளவில் தங்கள் நண்பர்கள் சிலருடன் கண்டம்பாக்கம் ஏரியில் நண்டு பிடித்துவிட்டு, அங்கேயே குளிக்க சென்றுள்ளனர். அந்த ஏரியில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்கப்பட்டதில் ஏரியின் பல இடங்களில் ஆங்காங்கே உருவாகியுள்ள பள்ளங்களில் கடந்த சில வாரமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கியிருந்தது.

அந்த தண்ணீரில் குளிப்பதற்காக சிறுவர்கள் முருகன், ரஞ்சித் ஆகிய இருவரும் இறங்கியுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கிய இருவரும் திடீரென நீரில் மூழ்கினர். இதை பார்த்ததும் ஏரிக்கரையில் இருந்த அவர்களது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். ஆனால் அங்கு மக்கள் யாரும் இல்லாததால் உடனே அவர்கள், கிராமப்பகுதிக்குள் விரைந்து ஓடிச்சென்று நடந்த சம்பவம் பற்றி முருகன், ரஞ்சித் ஆகியோரின் பெற்றோரிடமும் மற்றும் பொதுமக்களிடமும் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏரிக்கு விரைந்து ஓடி வந்தனர். பின்னர் கிராம இளைஞர்கள் சிலர், அந்த பள்ளத்தில் இறங்கி முருகன், ரஞ்சித் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததால் உடனே அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு 2 சிறுவர்களையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினர்.

பின்னர் முருகன், ரஞ்சித் ஆகியோரின் உடல்களை அவர்களது பெற்றோர்கள் கட்டியணைத்து கதறி அழுதது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது. தொடர்ந்து, இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தினால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story