கூடு கட்டுவதற்கு மரமின்றி வாழ்விடம் மாறிய பறவைகள்
மூன்று திசைகளும் மலைகள் உயர்ந்து நிற்கும் மாவட்டம், திண்டுக்கல் ஆகும். பசுமைக்கு பெயர்பெற்ற இங்கு, குடியிருப்புகளின் பெருக்கம் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
அதிலும் ஆலமரம், நாவல், வேம்பு உள்பட பறவைகளுக்கு பழம் தரும் மரங்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. அதிலும் நகரங்களில் மரங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு நாளுக்குநாள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
இதனால் மனிதர்களை போன்று, பறவைகளின் உணவு முறைகூட மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. மரக்கிளைகளில் முட்கள், சிறு குச்சிகள், காய்ந்த இலைகளை கொண்டு கட்டிய கூடுகளில், தென்றலின் தாலாட்டில் பறவைகள் ஓய்வெடுக்கும். இடையூறு ஏதுமில்லா அந்த வாழ்வே பறவைகளின் சொர்க்கம். ஆனால், மனிதர்களின் பேராசையும், பிறரின் துன்பமறியாத சுயநலமும் பறவைகளையும் விட்டுவைக்கவில்லை.
இதன் விளைவு, பறவைகள் உணவுக்கு மட்டுமின்றி வாழ்வதற்கு கூடு கட்டுவதற்கு கூட மரமின்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் துயரத்தில் சிக்கி துவளாமல், அதை தூரத்தில் தள்ளிவிட்டு கடமையை செய்வதே சிறந்தது. இதை பறவைகள் கச்சிதமாக கடைபிடிக்கின்றன. மரம் இல்லையே என்று அவை கூடு கட்டி வாழ்வதை நிறுத்தவில்லை. அது தனது வாழ்விடத்தை மாற்றி கொண்டன.
ரெயில் நிலையம், பஸ்நிலையம் ஆகியவற்றின் கூரைகள், போக்குவரத்து சிக்னல்கள் கம்பம், மேம்பாலத்தின் அடிப்பகுதி மற்றும் கட்டிடங்களில் மனிதர்கள் பயன்படுத்தாத பகுதிகளில் கூடு கட்ட தொடங்கி விட்டன. அந்த வகையில் தனது வாழ்விடத்தை மனிதர்கள் பறித்ததால், மனிதனின் இடத்தை பறவைகள் பயன்படுத்தி கொள்கின்றன. அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் காகம், மைனா ஆகியவை 30-க்கும் மேற்பட்ட கூடுகளை கட்டி இருக்கின்றன.
ரெயில் நிலையத்தின் கூரைகள், மின்சார கம்பங்களில் அவற்றின் கூடுகளை பார்க்க முடிகிறது. அந்த பறவைகளை யாரும் தொந்தரவு செய்வது இல்லை. யாரும் தொந்தரவு செய்வதை ரெயில்வே ஊழியர்கள் அனுமதிப்பதும் இல்லை. கூடுகளில் முட்டையிட்டு, அடைகாத்து அவை குஞ்சுகள் ஆனதும் வெளியேறாமல், தொடர்ந்து அங்கேயே தங்கி விடுகிறது.
வாழ்விடத்தை மாற்றிய பறவைகள், தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது. அதோடு மரங்களை அழிப்பது தொடர்ந்து ஒருகட்டத்தில் மனிதர்களை தவிர எந்த உயிரினமும் இருக்காது என்பதையும் உணர்த்துகிறது. இந்த பூமி, மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை. விலங்குகள், பறவைகளுக்கும் சொந்தம் தான். அதை நாம் உணர வேண்டும்.
அதோடு காடுகளை காப்பதோடு, வீடுகளில் நிச்சயம் மரம் வளர்க்க அனைவரும் முன் வரவேண்டும். அதேபோல் சாலையோரங்களில் நாவல், வேம்பு, ஆலமரம், அத்தி போன்ற பறவைகளுக்கு பழம் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். நாமும் வாழ்வதோடு, பறவைகள், விலங்குகளையும் வாழவிட வேண்டும் என்பது தானே உலக நியதியாக இருக்க முடியும்.
Related Tags :
Next Story