உடுமலை அருகே, ஆசிரியை வீட்டில் 9 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
உடுமலை அருகே பள்ளி ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து அங்கிருந்த 9 பவுன்நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலை,
உடுமலை அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மனைவி மகாலட்சுமி (வயது 43). தனியார் பள்ளி ஆசிரியை. கிருஷ்ணசாமி இறந்து விட்டதால் மகாலட்சுமி தனது மகள், பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மகாலட்சுமி தனது மகள் மற்றும் பெற்றோருடன் அக்காவின் மகன் திருமணத்திற்காக கடந்த 27-ந்தேதி காரத்தொழுவிற்கு சென்றார். திருமணம் முடிந்த பிறகு அங்கேயே இருந்துள்ளார். அவர் ஆசிரியையாக இருப்பதால் ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக தனது அக்காவின் கணவர் துரைராஜை, புத்தகம் எடுத்து வரும்படி தனது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். துரைராஜ் செல்வபுரத்தில் உள்ள மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டுதிறந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து அவர் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். உடனே மகாலட்சுமி காரத்தொழுவில் இருந்து புறப்பட்டு செல்வபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்தன. கட்டிலின் கீழ் வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவைத்திறந்து உள்ளே வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் 9 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது 28-ந்தேதியன்று வீட்டின் முன் கதவு திறந்திருந்ததாகவும், வீட்டு ஆட்கள் உள்ளே இருப்பதாக நினைத்திருந்ததாகவும் கூறியுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது யாரோ பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மகாலட்சுமி உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, ஏட்டு ருக்மணிதேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும்பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story