மும்பையில் 244 இடங்களில் இலவச கொரோனா பரிசோதனை மையம் - மாநகராட்சி அறிவிப்பு


மும்பையில் 244 இடங்களில் இலவச கொரோனா பரிசோதனை மையம் - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2020 5:00 AM IST (Updated: 2 Nov 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 244 இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நகரில் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நகரில் கொரோனா பரிசோதனை குறைந்த அளவில் மட்டுமே செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. தற்போது மும்பையில் தினந்தோறும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக மும்பையில் 244 இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் மும்பையில் 24 வார்டுகளில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை பொது மக்கள் கொரோனா சோதனை செய்ய முடியும். மேலும் பொதுமக்கள் 1916 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது ஆன்லைன் மூலமாகவே தங்களுக்கு அருகில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இது குறித்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி கூறுகையில், “விநாயகர் சதுர்த்திக்கு பிறகு செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பானது. மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது. எனவே சில கிளினிக்குகளில் ஏற்கனவே இலவச பரிசோதனையை தொடங்கி உள்ளோம். அடுத்த வாரத்தில் வார்டுக்கு குறைந்தது 5 கிளினிக்குகளின் பட்டியல் வெளியிடப்படும். அங்கு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்”  என்றார்.

Next Story