டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு: மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி


டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு: மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Nov 2020 11:50 PM GMT (Updated: 1 Nov 2020 11:50 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை, 

கொரோனா ஊரடங்கால் தமிழககத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருந்தன. அதன்பிறகு இரவு 7 மணியாகவும், பின்னர் இரவு 8 மணி வரையும் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தன. கொரோனா தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது.

பழைய நடைமுறை

இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, புதுக்கோட்டையில் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அரசின் அறிவிப்பு தெரியாமல் காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என நம்பி வந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதும், மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் பழைய நடைமுறைப்படி அமலுக்கு வந்துள்ளதால் மதுப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இல்லையெனில் இரவு 7 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டப்படும் போது முண்டியடித்துக்கொண்டு மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்செல்வது உண்டு. மேலும் டாஸ்மாக் கடைகள் முன்பும் கடும் போக்குவரத்து நெருக் கடி ஏற்படும். இனி அந்த நிலை இருக்காது என தெரிகிறது.

Next Story