தமிழக வேளாண்மை துறைக்கு பெருமை சேர்த்தவர் துரைக்கண்ணு இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்
5 முறை மத்திய அரசின் விருதுகளை பெற்று தமிழக வேளாண்மை துறைக்கு பெருமை சேர்த்தவர் அமைச்சர் துரைக்கண்ணு என கன்னியாகுமரியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர்ராஜூ புகழ்ந்து பேசினார்.
கன்னியாகுமரி,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்மைத்துறை அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான துரைக் கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மரணம் அடைந்தார்.
இந்தநிலையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் இரங்கல் கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று காலை நடந்தது. இதையொட்டி அங்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துரைக்கண்ணு உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் புதிய அரசு விருந்தினர் மாளிகைக்கு வெளியே உள்ள நுழைவு வாயிலில் இரங்கல் கூட்டம் நடந்தது.
கடம்பூர் ராஜூ புகழாரம்
இந்த கூட்டத்துக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் மரண செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது மிகுந்த பற்றும் விசுவாசமும் கொண்டவர் துரைக்கண்ணு.
2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றியவர். தற்போது வேளாண்மைத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், 5 முறை “கிரீஸ் கர்மா“ போன்ற மத்திய அரசின் விருதுகளை பெற்று தமிழக வேளாண்மை துறைக்கு பெருமை சேர்த்தவர் ஆவார். அமைச்சர் துரைக்கண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
தளவாய்சுந்தரம் பேச்சு
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் துரைக்கண்ணு தமிழக வேளாண்மைத்துறை அமைச்சராக சிறந்த முறையில் மக்கள் பணியை ஆற்றி வந்தார். அ.தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரது இழப்பு கழகத்துக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் பேரிழப்பு ஆகும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம், மாவட்ட அவை தலைவர் சேவியர் மனோகரன், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், ஒன்றிய அவை தலைவர் தம்பி தங்கம், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் சிவகுற்றாலம், சிவசெல்வராஜன், பேரூர் செயலாளர்கள் வின்ஸ்டன், ஆடிட்டர் சந்திரசேகரன், சீனிவாசன், கைலாசம், ராஜபாண்டியன், தாமரைதினேஷ், குமார், வீரபத்திரபிள்ளை, பஞ்சாயத்து தலைவர்கள் இசக்கிமுத்து, சுடலையாண்டி, இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கதலைவர் லட்சுமி சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் யூனியன் துணைத் தலைவர் சண்முகவடிவு, தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரோகிணி அய்யப்பன், மாவட்ட வர்த்தக அணிச்செயலாளர் ஜெஸீம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மணிகண்டன், நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், பாலமுருகன், பூலோகராஜா, வேலு, லீன், ராஜன், சதாசிவம், சந்துரு என்ற ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story