தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி கள்ளக்காதலன் மிரட்டியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி கள்ளக்காதலன் மிரட்டியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். பிணத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 30). இவருடைய மனைவி குமாரி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சிவண்ணா வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வருபவர் மைக்கேல். இவருடைய மனைவி ராணி. இவர்களுடைய மகன் தினேஷ். தாளவாடியில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக தினேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தையும் உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
கள்ளக்காதல்
எதிரெதிரே வீடு என்பதால் சிவண்ணா மனைவி குமாரியும், தினேசும் சாதாரணமாக பழகி வந்து உள்ளனர். பின்னர் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தினேசுடன் குமாரி சென்றார். இதைத்தொடர்ந்து 2 பேரும் தாளவாடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முதியனூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குமாரி சென்று உள்ளார். இதுபற்றி அறிந்ததும் நேற்று முன்தினம் காலை குமாரியின் வீட்டுக்கு சிவண்ணா சென்று உள்ளார். அப்போது குழந்தைகள் நலன் கருதி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சிவண்ணா தன் மனைவி குமாரியை சந்தித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிவண்ணாவின் வீட்டுக்கு குமாரி சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவண்ணா வீட்டின் முன்பு தினேஷ் நின்று கொண்டு குமாரியை தன்னுடன் வருமாறு அழைத்ததுடன், தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும் தன்னுடன் குமாரி இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக தினேஷ் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமாரி நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிணத்துடன் போராட்டம்
இதுபற்றி அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு குமாரியின் பிணத்தை தினேஷ் வீட்டின் முன்பு வைத்து நேற்று காலை 7 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தினேஷ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் கல்வீசி தாக்கினர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முற்பட்டனர். ஆனால் தினேசை கைது செய்யும் வரை குமாரியின் உடலை போலீசார் எடுக்கக்கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘குமாரியை தற்கொலைக்கு தூண்டியதாக தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய தாய், தந்தையையும் கைது செய்ய வேண்டும்,’ என வலியுறுத்தினர். இதற்கிடையே தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறுகையில், ‘தினேசை விரைவில் கைது செய்துவிடுவோம்’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை மாலை 3 மணி அளவில் கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து குமாரியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தினேசின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான தினேசையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்ணின் உடலை கள்ளக்காதலன் வீட்டின் முன்பு வைத்து 8 மணி நேரம் நடந்த போராட்டம் முதியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story