வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்,
கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். இதனிடையே நேற்று வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடந்த 7 மாதத்திற்கும் மேலாக வெறிச்சோடி காணப்பட்ட ஒகேனக்கல் களைக்காட்டியது. இதனால் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் வறுவல் விற்பனை படுஜோராக நடந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள், கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தீவிர கண்காணிப்பு
ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தொங்கு பாலம், பார்வை கோபுரம், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து ரசித்தனர். ஐந்தருவி பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், தீயணைப்பு படையினர் மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது பரிசலில் 3 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் அழைத்து செல்ல வேண்டும் என்று பரிசல் ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story